சென்னை: அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசுதரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் கடந்த செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, டிசம்பர் 25ந்தேதி முதல் ஜனவரி 2ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், பல தனியார் பள்ளிகள், விடுமுறை நாட்களிலும், பள்ளி யூனிபார்ம் இன்றி, சாதாரண உடையில் பள்ளிகளுக்கு வர மாணாக்கர்களை அறிவுறுத்தி உள்ளது. இது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விடுமுறை நாள்களில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தக் கூடாது என சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.