சென்னை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை விற்க தற்காலிக தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள், அரசு மற்றும் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. பல அரசு அலுவலகங்கள் கோவில் நிலம் மற்றும் நீர்நிலைகளில் கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் அரசுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான 44 ஆயிரம் திருக்கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மட்டும் சொத்துக்களை பட்டியலிட்டு, அதனை ஆக்கிரமித்துள்ளவர் களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை விற்பனை செய்ய தடை விதித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.கோயில் நிலங்களை விற்க தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசுக்குச் சொந்தமான கோயில்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.