சென்னை
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜகவினருக்கு நேருவைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை எனக் கூறி உள்ளார்.
நேற்று தமிழக காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் சுனாமியால் மரணம் அடைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விழா பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமை வகித்தார். இதில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துக் கொண்டார் .
மேலும் இந்த நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன், மாவட்ட தலைவர் அடையாறு துரை, மாநிலச் செயலாளர் கடல் தமிழ்வாணன், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணைத் தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பால் ஊற்றியும் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்
செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம், “மீனவர்களுக்குத் துணையாகக் காங்கிரஸ் மட்டுமே இருந்து வருகிறது. 69 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை மத்திய அரசு அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேரு இல்லை என்றால் நவீன இந்தியா கிடையாது. நேரு பாடுபட்டு கொண்டு வந்த திட்டங்கள் நவரத்தினங்கள் ஆக இருக்கக்கூடிய தொழிற்சாலைகள் ஆகும். ஆனால் நேரு சேர்த்து வைத்த சொத்துக்களை பாஜகவினர் விற்று வருகின்றனர். எனவே பாஜகவினருக்கு, அவரை பற்றிப் பேசுவதற்கு எந்தவித தகுதியும் கிடையாது.” எனக் கூறி உள்ளார்.