திருப்பாவை –12 ஆம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை 12 ஆம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 12 :
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கி னியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!
பொருள் :
எருமைகளுக்குத் தங்கள் இளங்கன்றுளைப் பற்றி ஞாபகம் வர,அவைகளுக்குப் பாலூட்டுவதாக எண்ணி, அந்த நினைவில் முலை வழியே இடைவிடாமல் பால் சுரக்கும்.இதனால் வீடு முழுவதும் ஈரமாகி,சேறாகிவிடும். இத்தகைய வளமை நிறைந்த செல்வத்தை உடையவனின் தங்கையே!
மார்கழிப் பனி எங்கள் தலையில் விழும்படி உன் வீட்டு வாசல் கதவைப் பற்றிக்கொண்டு நிற்கிறோம்.கோபத்தில் தென் திசையில் உள்ள இலங்கை அரசனான ராவணனை போரிட்டுக் கொன்ற,எங்கள் மனத்துக்கு இனியவனான ராமனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நீயோ வாய் திறந்து பேசாமல் தூங்குகிறாய் !
பெண்ணே! ஊரில் உள்ள வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் நாங்கள் உன் வீட்டு வாசலில் காத்திருப்பது தெரிந்துள்ளது.நீ மட்டும் இன்னும் உறங்குகிறாய் !