மானாமதுரை
சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதால் மானாமதுரை மக்கள் மாற்றுப்பாதையில் பயணம் செய்கின்றனர்.
வாகனங்கள் கிராமச் சாலைகளில் அதிவேகமாகச் செல்வதால் சுங்கச்சாவடி அமைத்து உள்ளூர் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இங்கு சுங்கக் கட்டணங்கள் தாறுமாறாக வசூலிக்கப்படுவதால் சரக்கு வாகன உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர் சுங்கக் கட்டணத்தைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் சோதனைச் சாவடி அமைத்திருப்பது பெரும் கண்டனத்திற்கு உரியது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
மதுரை நகரில் இருந்து ராமநாதபுரம் வரையிலான நான்கு வழிச் சாலையில் திருப்பாச்சேத்தி போகலூர் ஆகிய 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சுங்கச் சாவடியில் ஃபாஸ்ட் டிராக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையொட்டி ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர், ஏர்வாடி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குக் காய்கறி, பழங்கள், பல சரக்கு பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச்செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் சுங்கச்சாவடியை தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்கிறன.
இவர்கள் தூதை, மாரநாடு, ஆவரங்காடு உள்ளிட்ட கிராமச்சாலைகளை பயன்படுத்துவதால் இந்த சாலைகளிலும் சோதனைச்சாவடி அமைத்து சுங்கச்சாவடி நிர்வாகம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்திருக்கும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.