சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரன் எனப்படும் எம்ஜிஆரின் 34வது நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதல்வராக 3முறை பதவி ஏற்று மக்கள் பணியாற்றிவர். திமுகவில் இருந்து விலகி அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி வெற்றி வாகை சூடியவர். தமிழ்நாட்டில், பள்ளிக்குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை மேம்படுத்தி சத்துணவு திட்டமாக மாற்றி அனைத்து குழந்தைகளுக்கும் உணவளிக்க வகை செய்தவர். மேலும், விதவை / ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம், மகளிருக்கு சேவை நிலையங்கள், இலவச சீருடை, இலவச காலனி உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை அமல்படுத்தி தமிழக மக்களிடைய பெரன்மை பெற்றவர்.
இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தனது 70வது வயதில் உயிரிழந்தார். அவரது 34வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கே அவரது உருவப்படத்தை வைத்து, எம்ஜிஆர் பாடல்களை போட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டடு ருந்தது. அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தங்கள் இல்லங்களில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்த்துவியும் மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் எங்கள் புரட்சித் தலைவர், நாடி வருவோருக்கு வாஞ்சையோடு உதவும் வள்ளல் குணத்தில் மன்னாதி மன்னர், கழக நிறுவனர், இதயதெய்வம் MGR அவர்களின் நினைவு நாளில்,புகழ் வணக்கங்களை சமர்ப்பித்து, அன்னாரின் எண்ணங்களை தொடர்ந்து செயலாற்றிட உறுதியேற்போம்” என்றும் ஓபிஎஸ், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு எம்ஜிஆரை நினைவு கூர்ந்துள்ளனர்.