சென்னை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் பதியப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக அரசில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தம்மைக் கைது செய்வார்கள் என்னும் அச்சத்தில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடிப் புகார் பதியப்பட்டுள்ளது. சாத்தூரைச் சேர்ந்த ஒருவர் ராஜேந்திர பாலாஜி சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார். இந்த புகார் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது.