சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மீண்டும் அஞ்சலி செலுத்தினார்.
திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். 80 வயதாகும் இவர் கருணாநிதியின் உதவியாளர் மட்டுமின்றி நெருங்கிய நண்பராகவும் பார்க்கப்பட்டார். உடலநலக்குறைவு, வயோதிகம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த சண்முகநாதன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு கண்ணீர் மல்க மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தனது தந்தைக்கு எல்லாமுமாக இருந்த அவரின் உதவியாளர் சண்முகநாதனின் உடலை பார்த்த முதல்வர் ஸ்டாலின் அங்கேயே உடைந்து போய் கண்ணீர்விட்டார். அவரின் முகத்தையே பார்த்தபடி கண்ணீர்விட்டுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நின்றார். அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பும் அங்கிருந்து செல்ல மனமின்றி நீண்ட நேரம் கண்ணீர்விட்டபடி நின்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் அலுவல் பணிக்காக திரும்பியவர் இரவில் மீண்டும் சண்முகநாதனுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவரை பிரிய மனமின்றி, துக்கம் தாளாமல் மீண்டும் இரண்டாவது முறையாக மீண்டும் சண்முகநாதன் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்தார். இரவில் அமைச்சர்களோடு வந்த முதல்வர் மீண்டும் இரண்டாவது முறையாக சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.