நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
மறக்கமுடியாத சண்முகநாதன் சார்..
கலைஞரை பொதுவெளியில் படம் பிடித்தால் சண்முகநாதன் இல்லாத பின்னணி அரிதிலும் அரிது. அவ்வளவு நிழல் போன்ற அதியசயமான உதவியாளர்..
எந்த விவகாரமாகட்டும் அறிக்கைக்கோ, பேச்சுக்கோ கலைஞருக்கு எது தேவைப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து ஆவணங்களையும் குறிப்புகளையும தயார் படுத்திவைத்திருப்பவர்.
கேட்ட பிறகு தருவதில்லை. கேட்க தலை திரும்பும்போதே தந்துவிடுவார். குறிப்பறிதல் என்ற சாமர்த்தியம் இல்லாவிட்டால் கலைஞரோடு அரை நூற்றாண்டு காலம் பயணித்திருக்கமுடியுமா,?
கலைஞர் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதை சண்முகநாதன் அவர்களின் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
அறிவாலயத்தில் ஆண்டுக்கணக்கில் நாம் தினந்தோறும் பார்த்த முகம்.
நம்மை பொருத்தவரை பல கட்டங்களில் உதவி செய்தவர். சன் டிவி நியூஸ் எடிட்டோரியலில் பணியாற்றியபோது கலைஞர் பொதுக்கூட்டங்களில் பேசும் பேச்சின் முழு வீடியோ வடிவம் எங்களுக்கு உடனே கிடைத்துவிடும்.
இருந்தாலும் எங்களைப்போன்றவர்களுக்கு கலைஞரின் பேச்சை எடிட் செய்து கடைசியாக சண்முகநாதன் அனுப்பும் பேக்ஸ் பக்கங்களே முக்கியமானவை.
நள்ளிரவில் எவ்வளவு நேரமானாலும் சண்முகநாதன் தனது பணியை கச்சிதமாக செய்து எங்களது பணியை சுலபமாக்கிவிடுவார்.
அவரைப்பார்க்கும் தருணங்களில் வணக்கம் வைப்பதோடு சரி. இன்று அஞ்சலி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனது இந்த பிறவியே கலைஞருக்காகத்தான் என்று சொன்னவருக்கு, கலைஞர் இல்லாத வாழ்க்கையின் மேல் சலிப்பு வந்துவிட்டதுபோல. விடை பெற்றுக்கொண்டார்.