டில்லி
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி உள்ளதால் அவர் மாமியார் ஜெயா பச்சன் பாஜகவுக்கு சாபம் விட்டுள்ளார்.
முன்னாள் உலக அழகியும் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மீது பனாமா பேப்பர்ஸ் குற்றம் சாட்டியது. நேற்று இது தொடர்பாக டில்லி அமலாக்கத்துறை அவரிடம் 6 மணி நேரம் விவாதம் நடத்தியது. பாஜக அரசு வேண்டுமென்றே ஐஸ்வர்யாவுக்கு எதிராக அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
நேற்று மாநிலங்களவையில் 12 எம்பிக்கள் நீக்கம் குறித்து புவனேஷ்வர் கலிடா தலைமையில் விவாதம் நடந்தது. அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பியும் ஐஸ்வர்யா ராய் மாமியாருமான ஜெயா பச்சன், “தற்போது அவையை நடத்துபவர் எதிர்க்கட்சியாக இருந்த போது அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதை மறக்கக் கூடாது.
அவையில் எனது சொந்த வாழ்க்கையைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஆட்சி செய்யும் பாஜக அரசு இனி மோசமான நாட்களைச் சந்திக்கும். நான் இதை அவர்களுக்குச் சாபமாக விடுகிறேன்’ என ஆவேசமாக பேசினார். இது அவையில் பாஜக உறுப்பினர்கள் இடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயா பச்சனின் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவையை வழி நடத்திய புவனேஷ்வர் கலிடா,”அவையில் ஜெயா பச்சன் அவதூறான வார்த்தைகள் பேசி இருந்தால் அவற்றைச் சரி பார்த்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும்” எனத் தெரிவித்தார். ஆயினும் அவையில் கூச்சலும் குழப்பமும் தொடர்ந்ததால் அவை 30 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.