டெல்லி: பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கூட்டாக சந்தித்து பேசினர். மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் அழைக்கப்படுகின்றன. இந்த நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஏற்பாட்டில் இந்தியா-மத்திய ஆசியா இடையே 3-வது பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் டெல்லி வந்திருந்தனர்.
இந்த ஆலேசானை கூட்டத்தைத் தொடர்ந்து, 5 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் நேற்று பிரதமர் மோடியை கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது, ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடன் இருந்தனர்.
மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் நெருங்கிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம், மேலும் பிராந்தியத்தின் வளர்ச்சிகள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.