விருதுநகர்

ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படைகள் தேடி வருகின்றன.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியைப் பெற்றதாகப் புகார் எழுந்தது.  இதையொட்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட நான்கு பேர் மீது  5 பிரிவுகளில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு டிச. 17ல் தள்ளுபடியானது.

அன்றைய தினம் விருதுநகரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜேந்திர பாலாஜி காரில் ஏறி தலைமறைவானதால் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் தேடி வந்தனர். கைதுக்குப் பயந்து தலைமறைவாகப் பதுங்கியிருக்கும் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், அதிமுக பிரமுகர்கள், ஆதரவாளர்கள் உள்பட 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் காவல்துறை கண்காணித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெங்களூரு, கேரளா, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் தனிப்படை காவல்துறை தேடி வருகின்றனர். விருதுநகர் எஸ்பி மனோகர் இது குறித்து, ‘‘ஆவின் மோசடி தொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் நவ. 15ல் பதிவு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை டிச. 17ல் தள்ளுபடி செய்தது. அன்றைய தினம் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவசரமாக முடித்துக் கொண்டு காரில் ஏறி சென்றவர், பல கார்களில் மாறி, மாறி சென்று தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய 8 தனிப்படைகளை அமைத்துத் தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.