சென்னை
தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும் என முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு வரும் ஜனவரி 3 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் நாராயணன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :
”தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பொருட்களுடன், பொங்கல் வைக்க மண்பானையும், மண் அடுப்பும் விலையில்லாமல் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையினை மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் வைத்து வருகிறோம். கடந்த ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லை. ஆட்சிக்கு வந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல் பொங்கல் திருநாளைக் கொண்டாட உள்ளார். எங்களின் கோரிக்கையைத் தாய் உள்ளத்தோடு நிறைவேற்றித் தருவார் என்று நம்புகிறோம்.
இதன்மூலம் தொன்று தொட்டு வரும் பாரம்பரிய மண்பாண்ட தொழிலைப் பேணி காக்கவும், அந்த தொழிலாளர்களுக்கு வேலையை உறுதி செய்திடவும் முடியும். இந்த ஆண்டு கொரோனாவால் மற்ற தொழிலாளர்களை விட மண்பாண்ட தொழிலாளர்கள்தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மத்திய ரயில்வே அமைச்சர் ரயில் நிலையங்களில் தேநீர், காபி குடிக்க மண்ணால் செய்யப்பட்ட குடுவையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வட மாநிலத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் இது நடைமுறைக்கும் வந்தது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளனர்.
தமிழகத்தின் முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு தமிழக மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டு வருகிறீர்கள். அதனால், பொங்கல் தொகுப்போடு மண் பானை, மண் அடுப்பும் சேர்த்து வழங்கி 40 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்”
என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..