சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என கூறிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு நினைவிருக்க ட்டும் என கூறினார்.
திமுக அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தப்படுவது குறித்தும் கடுமையாக விமர்சித்தனர். ரெய்டு நடத்தும் அதிகாரிகள் ஓய்வுபெற்றாலும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அவர்களது வீடுகளில் ரெய்டு நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களாகிறது. தேர்தல் வாக்குறுதிகளாக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய வாக்குறுதிகளான அறிவிக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், மக்களின் பிரதான தேர்தல் அறிக்கையாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை கூறியது. ஆனால், மக்களுக்கு விடியாத வகையில், விடியும் அரசு என கூறி தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் பொம்மை முதலமைச்சராக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழக மக்களிடன் வாக்குகளை வாங்குவதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை அளித்து விட்டு, தற்பேது அதை செயல்படுத்த முடியாமல், ஏமாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது.
சிமெண்ட் விலையை உயர்த்திய திமுக அரசு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடுமையான வலை உயர்வால் கட்டுமான தொழிலில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏழை எளிய மக்களுக்காக அதிமுக அரசில் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை மூடும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு கண்டிக்கத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்காமல் ஏமாற்றி வரும் அரசாகவும் திகழ்ந்து வருகிறது என அடுக்கடுக்காக குற்றம் சாட்டியவர், மக்களை திசை திருப்ப, வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையை ஏவிவிட்டு பொய் வழக்குகளை போட்டு வருகிறது என்றவர், விடியா அரசு எவ்வளவு அவதூறு பரப்பினாலும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.
தொடர்ந்து பேசியவர், மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும், இதை விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.