சென்னை: நெல்லை சாப்டர் பள்ளி விபத்து குறித்து, பள்ளி முதல்வர்மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கட்டடங் களின் உறுதி தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.
நெல்லை டவன் அருகே பொருட்காட்சி திடல் அருகே செயல்பட்டு வரும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியிவரை கழிவறை கட்டிடடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்ததில் விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர்.சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மாணவர்கள் சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்து மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், தான்தோன்றித்தனமாக செயல்பட்ட அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஞானச்செல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. பள்ளியின் வகுப்பறை மற்றும் கட்டிடங்களில் உறுதித்தன்மை குறித்து சரியான முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என வருத்தம் தெரிவித்ததுடன், ‘ தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.