டில்லி
கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் 8% குறைந்தும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 54 நாட்களாகக் குறைக்கவில்லை.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. நவம்பர் 4 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. நவம்பர் மாதம் 9 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு 84.78 டாலராக இருந்தது. ஆனால் தற்போது அத் வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலராக உள்ளது. ஆயினும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் விலையைக் குறைக்காமல் அதே விலையை அறிவித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான உற்பத்தி வரியைக் குறைத்த மறுநாளில் இருந்து விலையில் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில், “எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் செலவு கடந்த நவம்பர் 10ம் தேதி பேரல் ஒன்றுக்கு ரூ.6,234.94 ஆக இருந்தது. தற்போது 12 சதவீதம் சரிந்து டிசம்பர் 15ம் தேதி ரூ.5.490 ஆகக் குறைந்துவிட்டது. இருந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த மாதம் நவம்பர் 4ம்தேதி முதல் மாற்றி அமைக்காமல் இருக்கின்றன.
ஆயினும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதிலில் பெட்ரோல், டீசல் விலை வெளிப்படைத்தன்மையுடன் நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆர்வலர்கள் இது குறித்து, “விலையை மாற்றி அமைக்கும் முன், அதற்கு முந்தைய 2 வாரங்களில் விலை நிலவரத்தின் அடிப்படையில்தான் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்கின்றன. அவ்வகையில் விலை தொடர்ந்து சரிந்துவரும் நிலையிலும் அதன் பலன் மக்களுக்குக் கிடைக்காதது ஏனோ?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.