சென்னை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கே மலர், காய்கறி, பழங்கள் என மொத்த, சிறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை வளாகங்கள் இயங்கி வருகின்றன.  இங்கு வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என நாள்தோறும் ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

சில நாட்களுக்கு இங்குள்ள பூ அங்காடியில் கடந்த தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் கவர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையொட்டி கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.   இங்குள்ள அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து கடைகளிலும் புழங்கி வரும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மார்க்கெட் நிர்வாக அலுவலர் சாந்தியிடம் சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். சி எம் டி ஏ நிர்வாகம் இம்மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க 3 நாட்கள்  கால அவகாசம் கேட்டுள்ளது.

சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார் இது குறித்து, ”கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய முழு முயற்சி எடுத்து வருகிறோம். பலர் பிளாஸ்டிக் கவர்களில் எடுத்து வந்து காய்கறி, பழங்களை விற்பனை செய்கின்றனர்.

எனவே இங்கு 3 நாட்களுக்குள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்குத் தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.