சென்னை

மிழக அரசு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது.  இங்குப் பல நாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பறவைகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம்.  அவ்வகையில் இந்த ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வழக்கத்தை விட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்துள்ளது. இது வரை 15  வகைகளில் 16,000 பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளதால் பறவைகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தமிழக அரசால் கடந்த 1998 ஆம் ஆண்டு 29.51 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஏரியும் அதனைச் சுற்றிய 5 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பும் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தேசிய வனவுயிர் வாரியத்திடம் கடந்த ஆண்டு  ஜனவரி 23ஆம் தேதி தமிழக அரசு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தது.   அந்த விண்ணப்பத்தில் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோமீட்டர் சுற்றளவிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்குக் குறைக்க வேண்டும் என்றும் அதன்மூலம் அப்பகுதிவாசிகள் , தொழில் மற்றும் அடிப்படை வசதிகளுக்காகக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கூறியிருந்தது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போதைய திமுக அரசு  கடந்த ஆண்டு தேசிய வன உயிர் வாரியத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்த விண்ணப்பம் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் முடிவைத் திரும்பப் பெறுகிறது.  அதாவது கடந்த அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட விண்ணப்பம்  திரும்பப் பெறுவதாகத் தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சரணாலய பரப்பளவு 5 சதுர கிலோ மீட்டரில் இருந்து 3  சதுர கிலோ மீட்டராக குறைக்கக் கடந்த ஆட்சியில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அந்த திட்டம் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தேசிய வனவுயிர் வாரியத்திற்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவைச் சுருக்கினால் பல்லுயிர் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பறவைகளின் எண்ணிக்கை  குறையும். எனவே எல்லையைக் குறைக்கக் கோரி அனுப்பிய விண்ணப்பத்தை நிரந்தரமாகத் திரும்பப் பெறுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.