சென்னை: பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ.31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது என்று அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  ஆய்வு செய்த அமைச்சர், அங்கு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சில ஆசிரியர்கள் தவறான செயலில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.

பாலியல் புகார்களுக்கு உள்ளாவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளது என்றார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை என்றவர்,  இதுகுறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

பல பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதே என்ற கேள்விக்கு,  ”பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதில், ரூ.31 ஆயிரம் கோடி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. எஞ்சியுள்ள ரூ.2 ஆயிரம் கோடியைத்தான் 45 ஆயிரம் பள்ளிகளுக்கும் பிரித்து கட்டமைப்பு பணிகளுக்கு வழங்கப்படுகிறது என்றவர், திமுக ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.