டில்லி

டந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.  இதையொட்டி தலைநகர் டில்லியில் அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.  சிங்கு எல்லையில் நடந்த இந்த போராட்டத்தால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 44 மூடப்பட்டது.

சுமார் ஓராண்டுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்தது.   மத்திய அரசு பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புக் கொள்ளாததால் போராட்டம் தொடர்ந்தது.  சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு அடி பணிந்த மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டது.

இதையொட்டி போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலை 44 மீண்டும் இலகு ரக வாகனங்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.  பழுது பார்க்கும் பணிகளால்  தற்போது கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.