ஊத்துக்கோட்டை
ஆந்திராவில் திடீர் எனக் கன மழை பெய்ததால் பிச்சாட்டூர் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டு பெரியபாளையம் தரைப்பாலம் மூழ்கி உள்ளது.
ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. பிச்சாட்டூர் ஏரியின் கொள்ளளவு 281 மில்லியன் கனஅடிஆகும். தற்போது கன மழை பெய்து வரும் நிலையில் 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 280 மில்லியன் கன அடிக்கு மேல் நீர் இருப்பு அதிகமானதால் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 1,500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஏரியின் பாதுகாப்பு கருதி ஒரு மதகு வழியாக நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 1,600 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிகிறது.
இதனால் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அப்பகுதி மக்கள் இந்த பாலத்தில் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். காவல்துறையினர் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.