கிண்டி கத்திபாரா சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் உள்ள 5.9 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் மற்றும் வெளியூரில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக புறநகர் பேருந்து நிலையத்துடன் கூடிய பல்வேறு பயன்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ. 14 கோடி திட்ட மதிப்பில் சுமார் 1.45 லட்சம் சதுர அடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘கத்திபாரா நகர்ப்புற சதுக்கம்’ பணியில் பேருந்து நிறுத்தம், வணிக வளாகம், வாகன நிறுத்தம், உணவகங்கள், கடைகள், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஏற்படுத்தப்பட இருக்கிறது.

இங்கு, ஒளிரும் வண்ண விளக்குகளால் ஆன தமிழ் உயிரெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் நிறுவப்பட்டுள்ளது அவ்வழியாக செல்வோரின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இளைஞர் ஒருவர் இதனை அழகாக படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கிண்டி கத்திபாரா சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை கடந்த அக்டோபர் மாதம் ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு ஆலோசனைகளையும் அப்போது வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.