சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளி மற்றும் நகை வியாபாரம் என்று அனைத்திலும் கொடிகட்டிப் பறக்கும் சென்னையைச் சேர்ந்த இவ்விரு நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தங்கள் விற்பனையைக் குறைத்து மதிப்பிட்டு வரவு செலவு கணக்கில் குளறுபடி செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனத்தில் ஒன்றில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்ட்டுள்ளதோடு 150 கோடி ரூபாய் அளவுக்கு ரசீது இல்லாமல் பணமாக கொடுத்து ஜவுளி மற்றும் நகைகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிறுவனத்தில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரசீதுகள் கைபடப்பட்டுள்ளது. மேலும் பழைய பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் 7 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த வாரம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு கிளைகளில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக கூறி மூடப்பட்டிருந்த நிலையில் வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பு வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.