மும்பை

காங்கிரஸ் கட்சி இல்லாமல் புதிய கூட்டணி அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எண்ணுவதாக சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 3 நாட்கள் பயணமாக மகாராஷ்டிரா சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிவசேனா கட்சி தலைவர் மகன் ஆதித்யா தாக்கரே,சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.  காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்கத் தவறியதாக மம்தா தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகத்தினரிடம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பதே இல்லை எனத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.  இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடான சாமனாவில் கட்சியின் செய்தி தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.

அதில் சஞ்சய் ராவத்,

“காங்கிரஸ் இல்லாத மாற்றுக் கூட்டணியை அமைத்து மத்தியில் பாஜகவை எதிர்க்க மேற்கு .வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயன்று வருகிறார். தற்போது கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது.  மேலும் தனது தடத்தைத் திரிபுரா, மேகாலயாவிலும் பதிக்க முயல்கிறது.

மம்தா – ஆதித்யா தாக்ரே உடனான சந்திப்பின் போது இரு மாநிலங்களின் கலாச்சாரங்கள் குறித்துப் பேசினார்   தவிர. மே.வங்கத்தில் தொடங்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருமாறு ஆதித்யா தாக்கரேவுக்கும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.  இந்த இரு மாநிலங்களுக்கு இடையே வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

அத்தகைய தொடர்பு வலுப்பெறும் போது இளைய சமுதாயத்தினர் பயன் பெறுவார்கள்.  மம்தா காங்கிரஸ் கட்சியை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இணையாக புதிய அணியை உருவாக்கி பாஜகவையும், பாசிச சக்திகளையும் எதிர்க்க முயல்கிறார்.

யாரெல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விரும்பவில்லையோ அவர்கள் குழப்பத்தையும், பின்னால் இருந்து பேசுவதற்குப் பதிலாக தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்”

எனத் தெரிவித்துள்ளார்.