உ.பி. மாநிலத்தில் உள்ள சர்க்கரை மற்றும் பால் உற்பத்தி ஆலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்கக் கோரி அம்மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று விசாரணை நடத்தினார் உ.பி. அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், “பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினால் தான் காற்று மாசு அதிகரிக்கிறது” என்று கூறினார்.
இவரின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத தலைமை நீதிபதி “அப்படியானால் பாகிஸ்தானில் இயங்கி வரும் நிறுவனங்களை நான் தடை செய்ய வேண்டுமா” என்று காட்டமாக கேட்டார்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி டெல்லி மற்றும் உ.பி. அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டெல்லியை சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் உள்ள 11 அனல் மின் நிலையங்களில் 6 அனல் மின்நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இன்று முதல் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்படும் என்றும் பசுமை வாயுக்களைக் கொண்டு இயங்கும் தொழில் நிறுவனங்கள் மட்டுமே திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8 மணி நேரம் இயங்கவும் டெல்லி மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், மருத்துவமனைகளுக்கான கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற இன்று மறுஉத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், உ.பி. அரசு தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரிய மனு மீதான உ.பி. அரசின் இந்த விவாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.