டெல்லி: டிசம்பர் 16, 17ந்தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி யூனியன்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மக்கள் விரோத மத்தியஅரசின், வங்கிகள் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கண்டித்து இந்த மாதம் (டிசம்பர்) 16 மற்றும் 17-ம் தேதி இரு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி யூனியன் அமைப்பான யுஎப்பியு தெரிவித்துள்ளது.
மத்தியஅரசின் 2021-22ம் ஆண்டுக்கான பொதுநிலை அறிக்கையில், “ நடப்பு நிதியாண்டில் இரு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப் படும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு வங்கிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதை மத்தியஅரசு கண்டுகொள்ளாத நிலையில், 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின்(ஏஐபிஓசி) பொதுச்செயலாளர் சஞ்சய் தாஸ், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பொருளாதார பாதிப்பு ஏற்படும், மேலும், கிராம சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தவர்,நாட்டின் ஒட்டுமொத்த டெபாசிஸ்டகளில் 70 சதவீதம் பொதுத்துறை வங்கிகளில்தான் இருக் கிறது. அப்படி இருக்கும்போது, இந்த வங்கிகளை தனியாரிடம் வழங்கும்போது, சாமானிய மக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் ஆபத்தில் முடியும் என்று எச்சரித்தார்.
மேலும், மத்திய அரசின் தனியார் மயமாக்கும் இந்த திட்டம் முழுமையாக அரசியல் நோக்கம் சார்ந்து என்று சாடியவர், வங்கிகளை பெரிய முதலாளிகள் வசம் கொடுக்க மோடி அரசு விரும்புகிறது என்றவர், வங்கிகள் தனியார்மயமாக்கத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால், டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து போராட்டங்கள், தர்ணாக்கள் அடுத்தடுத்தாக நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.