சென்னை: மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி பயணமாகிறார். அங்கு வெள்ளச் சேத பகுதி களை ஆய்வு செய்வதுடன், நிவாரண  உதவிகளும் வழங்குகிறார்.

வடகிழக்கு பருவமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தூத்துக்குடியும் ஒன்று. அங்கு பெய்த மழை காரணமாக, ஆறு, ஏரி களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியுருப்புகளிலும் வெள்ளம் புகுந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம், ஒருங்கிணை நீதிமன்ற வளாகம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மாநகர பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த வளாகத்தில் தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகம் போன்ற முக்கிய கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதையடுத்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், தூத்துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றுவரை பள்ளிகள் திறக்கப்டவில்லை. இதுவரை அங்கு வெள்ளநீர் வடியவில்லை. இந்த நிலையில், மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் தூத்துக்குடி பயணமாகிறார்.

அங்கு மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதுடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதுடன் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.