சென்னை: சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் கடைகள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள் உள்படதமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான தி.நகரைச் சேர்ந்த சரவணா ஸ்டோர்ஸ் குரூப், சமீப காலமாக தனித்தப்பெயர்களில் செயல்பட்டு வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், லெஜன்ட் சரவணா என பல பெயர்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் சரவணா ஸ்டோர்களின் கிளைகள் சென்னையில் மட்டுமல்லாது, திருநெல்வேலி, மதுரை, கோவை என பல இடங்களில் உள்ளது.
இதில், சூப்பர் சரவணா ஸ்டோர், மற்றும் சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள், அலுவலகங்கள், நிறுவனர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் இன்று இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர், மற்றும் சரவணா செல்வரத்தினம் அலுவலகம் மற்றும் கடைகள் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.