டெல்லி: கடந்த ஐந்தாண்டுகளில் ஆறு லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறந்துள்ளனர் என பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை 1,11,287 இந்தியர்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய அமர்வின்போது, உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், கடந்த 2017 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டம் வரை சுமார் ஆறு லட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் ஆறு லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். அதன்படி, 2017ஆம் ஆண்டில் 1.33 லட்சம் பேரும், 2018ஆம் ஆண்டில் 1.34 லட்சம் பேரும், 2019ஆம் ஆண்டில் 1.44 லட்சம் பேரும், 2020ஆம் ஆண்டில் 85,248 பேரும், 2021ஆம் ஆண்டில் செப்டம்பர் 1.11 லட்சம் பேரும் இந்திய குடியுரிமையை வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை 1,11,287 இந்தியர்கள் குடியுரிமையை கைவிட்டனர்.
அதே வேளையில், கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் 10,645 பேர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இதில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே அதிகபட்சமாக இந்திய குடியுரிமையைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றும், இதுவரை 4,177 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் தற்போதைய புள்ளிவிவரப்படி, சுமார் ஒரு கோடியே 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
அதே வேளையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை ஒப்படைப்பதற்கான காரணம் ஏன்பது குறித்து மத்திய அமைச்சர் அளித்த பதிலில் குறிப்பிடப்படவில்லை.
மத்தியஅரசு 2018 ஆம் ஆண்டில், குடியுரிமையை கைவிடுவதற்கான பிரகடனத்திற்கான குடியுரிமை விதிகளின் கீழ் MHA XXII படிவத்தை திருத்தியது, இது முதல் முறையாக, “விண்ணப்பதாரர் வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்று இந்திய குடியுரிமையைத் துறக்க விரும்பும் சூழ்நிலைகள்/காரணங்கள்” என்ற பத்தியை உள்ளடக்கியது. இதற்கான நடைமுறைகளை மத்தியஅரச சமீபத்தில், எளிதாக்கியது மற்றும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன, மேலும் துறக்கும் செயல்முறை முடிவடைய 60 நாட்களுக்கு மேல் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் விண்ணப்பித்து தங்களது குடியுரிமையை துறந்துள்ளனர்.