டெல்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். கம்யூனிஸ்டு எம்.பி. பினாய் விஸ்வரம் அலுவல் தடை குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் 29ந்தேதி) இன்று தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய முதல்நாள் கூட்டத்தொடரிலேயே 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பலவேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளன. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கடந்த ஓராண்டில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரியும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதுபோல, விவசாயச் சட்டப் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பதிவை உருவாக்கவும், அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.
மேலும், | சிபிஐ எம்பி பினோய் விஸ்வம் ராஜ்யசபாவில் அலுவல் தடை நோட்டீசை அளித்து, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை உறுதி செய்வது குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.