டெல்லி: மக்களவை துணை சபாநாயகர் தேர்தலுக்கான பணியை தொடங்குங்கள் என மக்களவை சபாநாயகர் ஓம்பில்லாவுக்கு, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மோடி தலைமையிலா பாஜக கூட்டணி அரசு ஆடசி செய்து வருகிறது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி பீடத்தில் அமர்கிறது. அதன்படி, மக்களவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த ஓம்பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், துணை சபாநாயகர் பதவி தேர்ந்தெடுக்காமல் உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் 93–வது பிரிவின்படி, நாடாளுமனற்த்தின் மக்களவைக்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுமட்டுமின்றி, சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவி காலியாகும்போது, மற்றொரு உறுப்பினரை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தல் முடிந்தவுடன் சபாநாயகர் தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அப்போது, பா.ஜ.க.வை சேர்ந்த ஓம்பிர்லா அடுத்த மாதத்தில் அதாவது ஜூன் மாதம் 18–ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, துணை சபாநாயகராக மக்களவையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவரே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஆனால், துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால், துணை சபாநாயகர் தேர்தல் நடத்து வதை மத்தியஅரசு தவிர்த்து வருகிறது. தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் துணை சபாநாயகர் இல்லாமல் மக்களவை நடந்துகொண்டு வருகிறது.
இதற்கு காரணமாக, மொத்த இடங்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறும் கட்சிதான் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியும் என்ற அரசியல் சாசனத்தை கூறும் பாஜக, தேர்தலில் எந்த கட்சியும் 54 இடங்களில் வெற்றி பெறாததால், எதிர்க்கட்சியின் அந்தஸ்தைப் பெற எதிர்க்கட்சிகளுக்கு தகுதியில்லை என்று மறுத்து வருகிறது.
ஆனால், ஒரு நாட்டின் அரசியல் சட்டங்கள் நிறைவேற்றப்படும் நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் என்ற ஒரு பதவி இல்லாமல் தொடர்வது ஜனநாயக நெறிமுறை இல்லை என்றும், ஏதாவது ஒரு எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியைக் கொடுப்பதில் தவறு இல்லை. அதற்கும் முன்னுதாரணம் இருப்பதாகவும், துணை சபாநாயகர் இல்லாத மக்களவையாக இருக்கக்கூடாது என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த முறை, பாஜக கூட்டணி கட்சியான அதிமுகவைச் சேர்ந்த தம்பித்துரை துணை சபாநாயகராf தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக கூட்டணி கட்சி ஏதும் பெரும்பாலான எம்.பி.க்களை கொண்டிருக்கவில்லை என்பதால், துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, துணை சபாநாயகர் தேர்தலுக்கான பணியை உடனே தொடங்குங்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
வரும் 29ந்தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில் வேளாண் சட்டம் வாபஸ் உள்பட பல்வேறு மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் பெகாசஸ் உள்பட பல விவகாரங்களை கிளப்ப அதகளப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இந்த நிலையில், மக்களை எதிர்க்கட்சி தலைவரான, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சவுத்ரி, மக்களவை துணை சபாநாயகர் நியமனம் தொடர்பான செயல்முறையை உடனே தொடங்குமாறு மக்களவை தலைவர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். துணை சபாநாயகர் இருந்தால், அது உங்களுக்கு (சபாநாயகர்) சபையில் அலுவல்களை சுமூகமாக நடத்த உதவும் என்று தெரிவித்து உள்ளார்.
2019ம் ஆண்டு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும், தி.மு.க. 24 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 22 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 16 இடங்களிலும், பிஜு ஜனதாதளம் கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற மேலவையான ராஜ்யசபாவில், அரசியல் சட்டத்தின் 89–வது பிரிவின்படி துணை ஜனாதிபதி தன் பதவி வழியில் மாநிலங்களவை தலைவராக இருப்பார். அந்த வகையில் தற்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மாநிலங்களவை தலைவராக இருக்கிறார். துணை தலைவராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஷ் தொடர்ந்து வருகிறார்.
ஏற்கனவே மக்களவை துணை சபாநாயகராக 1980–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 1984–ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி வரை திமுக முன்னாள் எம்.பி., ஜி.லட்சுமணன் பதவி வகித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி எம்.தம்பிதுரை கடந்த முறையும், 1985 முதல் 1989, 2014 முதல் 2019 வரை என இருமுறை துணை சபாநாயகராக பணியாற்றி இருக்கிறார்.