சென்னை: மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் 11.30 மணி அளவில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் சென்று சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை கருத்தில்கொண்டு நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுகொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பை கருத்தில் கொண்டு நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் 13ல் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசு தலைவர் அனுமதி பெறும் வகையில், நடைமுறைப்படி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு விரைவில் குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்றுத்தர தலமைச்சர் கேட்டுக்கொண்டார்.