சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 3ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், செம்பரம்பாக்கம், புழல், பூண்டிகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்ட உள்ளது. தற்போது தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.