உத்தர பிரதேச மாநில நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 25 ம் தேதி நடந்தது, பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த விழாவில் ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக புகழப்படும் இந்த விமான நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

சுமார் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகள் வந்துபோக கூடிய அளவில் தயாராகும் இந்த விமான நிலையத்தின் முதல் கட்ட கட்டுமான பணி 2024 ம் ஆண்டு நிறைவுபெறும் என்று கூறப்படுவதுடன் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும் என்று வர்ணிக்கப்படுகிறது.

ரூ. 60,000 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் இந்த சர்வதேச விமான நிலையத்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க. வினர் பதிவிட்ட நிலையில், இந்த படத்தை அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கங்களிலும் பகிர்ந்தனர்.

நொய்டா விமான நிலையத்தின் புகைப்படம் என்று சொல்லப்பட்ட அந்த புகைப்படம் பெய்ஜிங் விமான நிலையத்தின் புகைப்படம் என்ற உண்மையை ஊடகங்கள் வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, சீன செய்தி நிறுவன அதிகாரி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் “சீன பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையத்தின் புகைப்படங்களை இந்திய அரசு அதிகாரிகள் தங்கள் “உள்கட்டமைப்பின் சாதனைகளுக்கு” சான்றாக பயன்படுத்த வேண்டியிருந்தது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மாநில மற்றும் மக்களவை பொது தேர்தல்களின் போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற படங்களை தங்கள் ட்விட்டரில் பதிவிட்டு காண்பிக்கும் வேலையை நெடுநாட்களாக செய்து வருவது இந்திய மக்களுக்கு தெரிந்த நிலையில் தற்போது அவர்களின் பித்தலாட்ட வேலைகள் சர்வதேச அளவில் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.