சென்னை: தமிழகத்தில் தொடரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. இதற்கிடையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக, ஏரி, குளங்கள் நிரம்பி, சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகசென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்கடி, டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக, மாநில கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.