சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், மத்தியக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகம் கேட்டுள்ள வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தினார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் கடந்த 21 ஆம் தேதி சென்னை வந்தது. அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து கடந்த 22ம் தேதி சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, பகுதிகளிலும், 23-ஆம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் சென்று வெள்ளச் சேதங்களை கணக்கிட்டும், விவசாயிகளிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். குடியிருப்புகள், விளைநிலங்கள், சாலைகள் என அனைத்தையும் மத்தியக் குழு ஆய்வு செய்தது.
இதையடுத்து, இந்த குழுவினர் இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அபபோது தமிழக அரசுக்காக வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் சார்பில், மத்திய அரசிடம் ரூ.2,629.29 கோடி நிவாரணம் கோரப்பட்டுள்ளது. இதில் ரூ.549.63கோடியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.