டெல்லி: ஜிஎஸ்டி வரி விகித வரம்புகளை உயர்த்த, ஃபிட்மென்ட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக, ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விலைவாசி மேலும் உயர்ந்து, சாமானிய மக்களுக்கு மேலும் சுமையை அதிகரித்ககும் நிலை ஏற்படும்.
தற்போது நடைமுறையில் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) குறைந்த பட்சம் 3 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை அமலில் உள்ளது. தொடக்க காலத்தில், சரக்கு மற்றும் சேவைகளுக்கான வரி, 0%, 5%, 12%, 18%, 28% ஆக இருந்தது. மேலும் கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டு வந்தது. பின்னர் விரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஃபிட்மென்ட் கமிட்டி ஜிஎஸ்டி வரி குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க பரித்துரைத்து வருகிறது.
ஏற்கனவே ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஃபிட்மென்ட் கமிட்டி, செயலி,ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்க முன்மொழிந் துள்ளது. அதன்படி, ஆன்லைன் உணவு விநியோக சேவைகளான, ஸ்விக்கி மற்றும் ஸொமேட்டோ நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்த நேரிடும். மேலும் ஆன்லைன் உணவு மீதான விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஃபிட்மென்ட் கமிட்டியின் பரிந்துரையின்படி, தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கு தற்போது விதிக்கப்படும் 3 சதவிகித ஜிஎஸ்டியை 5 சதவிகிதமாக உயர்த்த அறிவுறுத்தி உள்ளது. அதுபோல, 5 சதவிகித ஜிஎஸ்டி வரி வரம்பை 7 சதவிகிதமாகவும், 18 சதவிகித வரம்பை 20 சதவிகிதமாகவும் உயர்த்தலாம் என்றும், 12 முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுவதை ஒன்றிணைத்து அதை 17 சதவிகிதமாக நிச்சயிக்கலாம் எனவும் இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரிகளை உயர்த்த மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. இது குறித்து வரும் 27 ஆம் தேதி நடக்க உள்ள அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, அனைத்து மாநிலஅரசுகளிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்த நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் இன்னும் மீட்கப்படாத நிலையில், எரிபொருள் விலை உயர்வினால், மக்கள் அல்லாடி வரும் சூழலில், அதன்மீதான வரிகளை குறைக்கும் வகையில், ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர மறுக்கும் மத்திய, மாநில அரசுகள், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை உயர்த்தினால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்…