சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்படடபோது, அவர் சிகிச்சை பெறும் பகுதியில் உள்ள சிசிடிவிக்களை நிறுத்தச் சொன்னது யார் என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் பெறும் உரிமைச்சட்டப்படி, (ஆர்டிஐ) கேள்வி கேட்டப்பட்ட நிலையில், தமிழகஅரசின் ஒவ்வொரு துறையும் தங்களது தெரியாது என பதில்களை தெரிவித்து உள்ளன. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலப் பாதிப்பு காரணமாக, திடீரென சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2016ம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்கள் அகற்றப்பட்டன. இதனால், சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, திடீரென உயிரிழந்த ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன, அவர் எப்படி இருந்தார் என்பது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், அவர் நலமுடன் இருப்பதாகவும், இட்டி சாப்பிடுகிறார், தயிர்சாதம் சாப்பிடுகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் பல தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தது. மேலும், அவருடன் சசிகலா மட்டுமே உடன் இருந்த நிலையில், அப்போதைய அமைச்சர்கள், மற்றும் அப்போதைய கவர்னர் உள்பட ஒருவரையும் சந்திக்க மறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த அதிமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிமன்ற தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், அந்த விசாரணைக்கு ஆஜராக அப்போலோ மருத்துவமனை மறுத்து வருவதுடன், உச்சநீதிமன்றத்தில் சென்றும் தடையும் பெற்றுள்ளது. ஜெயலலிதா மரணமடைந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவரது மர்ம மரணத்துக்கு விடை கிடைக்கவில்லை.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் அப்போலோ தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயலலிதா சிகிச்சையின்போது, சிசிடிவிக்களை நிறுத்தச் சொன்னது அப்போதைய தலைமைச்செயலாளர் ராம மோகன ராவ், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் வாய் மொழியாக பிறப்பித்த உத்தரவின் பெயரில் சிசிடிவிக்கள் அணைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர், ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது, அங்குள்ள சிசிடிவி காமிராக்களை நிறுத்தச் சொன்னது யார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, பதில் அளித்துள்ள தலைமைச் செயலகம், தங்களிடம் இதற்கான பதில் இல்லை என்று கூறி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மனுவை அனுப்பி உள்ளது. அவர்களும், தங்களிடமும் சிசிடிவி குறித்த தகவல் இல்லை என பதில் அளித்துள்ளது.
ஒரு மாநில முதல்வர் சிகிச்சையில் இருந்தபோது, அதுதொடர்பான ஆவணங்கள் ஏதும் இல்லை என தமிழகஅரசு தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.அப்போலோ மருத்துவமனையோ வாய்மொழி உத்தரவு என ஜகா வாங்கிக்கொண்டிருக்கிறது. அப்படியானால், ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் அரசு ஊழியர் எனும் பட்சத்தில், அவரது சிகிச்சை குறித்து அரசுக்கு தெரியவில்லை என கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மரணம் அப்போது ஜெயலலிதாவுடன் மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலாவை விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோல, வாய்மொழி உத்தரவைக் கொண்டு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவிக்களை நிறுத்தியதும், அகற்றியதும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவும் சந்தேகத்திற்கிடமாக உள்ளது.