சென்னை: தமிழ்மண்ணின் வீரம் செறிந்த மகன்  “அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்” என மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற பாலக்கோடு தாக்குதலின்போது பாகிஸ்தானில் பதுங்கி வாழும் பெயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கி அழித்தது. இந்த நடவடிக்கையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் படையினரின் விமானத்தை சுட்டி வீழ்த்திய நிலையில், அவரது விமானமும் சுடப்பட்டதால், பாகிஸ்தானுக்குள் தரையிறங்கினார். பின்னர் அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, இந்தியா உள்பட உலக நாடுகளின் எச்சரிக்கை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அபிநந்தன் உலக அளவில் பிரபலமானார். அவரது மீசை, மிடுக்கான பேச்சு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அவரின் வீர தீரத்தை போற்றும் வகையில், அவருக்கு  வீர் சக்ரா விருது இன்று வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருதை வழங்கி கவுரவித்தார். அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது, அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அபிநந்தனுக்கு  வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  ‘என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் ‘என்று கூறியுள்ளார்.