சென்னை: பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது குறித்து மத்திய, மாநில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மத்தியஅரசு அமுல்படுத்திய 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். . நாட்டில் விவசாயிகள் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் விவசாபய சட்டங்கள் குறித்து எங்களால் விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை. அதற்காக விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.
இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுகிறது. போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதை மத்திய அரசின் நோக்கம். புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும்; அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண் வல்லுனர்கள் இடம்பெறுவர் ” என்றார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கவன் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வேளாண் சட்டம் வாபஸ் குறித்து மற்ற தலைவர்களின் கருத்து இங்கே தொகுக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:
பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் இது உங்கள் வெற்றி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேளாண் சட்ட ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இத்த போராட்டத்தில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் எனவும் கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
விவசாயிகளின் தியாகம் அழியாது என, வேளாண் சட்டம் வாபஸ்க்கு வரவேற்பு தெரிவித்துள்ளவர், விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி.கனிமொழி:
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது நமது நாட்டுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என திமுக எம்,பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது சாதாரண வெற்றியல்ல, மக்களாட்சியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்த வெற்றி. மக்கள் குரலே மகேசன் குரல். நாம் இணைந்து போராடினால் நமது உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்:
மக்கள் சக்தி கோட்டை கதவுகளை விட வலிமையானது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு வலுசேர்த்த விவசாயிகளுக்கு நன்றி, களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர்வீசும் எனவும் கூறினார்.
தமிழக அமைச்சர் கே.என்.நேரு
வேளாண் சட்டம் ரத்து, விவசாயிகளின் உறுதியான ஓராண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். காவல்துறை சார்பில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்த வெற்றி இந்தியாவை உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி. இதை அன்றே செய்திருக்கலாம். சட்டமே போட்டிருக்க தேவையில்லை.’ என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்கும்,குறைந்தப்பட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும் எனது நன்றிகளை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ்:
பிரதமரின் அறிவிப்பு அவரின் பெருந்தன்மை, விவசாயிகள் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது. பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; இதற்காக அதிமுக சார்பில் பிரதமருக்கு நன்றி எனவும் கூறினார்.
பாமக தலைவர் ராமதாஸ்:
சென்னை: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்; உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப் பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி எனவும் கூறினார்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன்
‘மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. குளிர்,வெயில்,மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர்த்தியாகங்கள் செய்து விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது!
இதற்காக ஓராண்டு காலமாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும். இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் வேளாண்மை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது விவசாயிகளை முழுமையாக கலந்தாலோசித்து அவர்களின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.
மேலும், தமிழக விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதில்லை என்ற உறுதியான முடிவையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சசிகலா:
நம் இந்திய பிரதமர், நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, குறிப்பாக அனைத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, எந்தவித அரசியல் கௌரவமும் பார்க்காமல், பெருந்தன்மையோடு, மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளதற்கு, தமிழக மக்களின் சார்பாக, முதற்கண் என் நன்றியை மனதார தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக விவசாயிகளும், பிற மாநிலங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கடந்த ஒரு வருட காலமாக போராடினார்கள். இந்த போராட்டத்தில், எவ்வித சாதிமத பேதமில்லாமல், மொழி வேறுபாடின்றி, ஒருமித்த கருத்தோடு, ஒன்றிணைந்து, போராடிய விவசாயிகளின் கோரிக்கை இன்று ஏற்கப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகவும் வரவேற்கப்படவேண்டியது ஆகும்.
எங்கள் ஆசான் புரட்சித்தலைவர் பாடிய,
“கடவுள் என்னும் முதலாளி கண்டுடெடுத்த தொழிலாளி விவசாயி” என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளதுப் போன்று, “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” “ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் விதமாக, உலக நாடுகள் எல்லாம் திரும்பி பார்க்கும் வகையில், நம் இந்திய திருநாட்டில், வேளாண்மையில் புதிய புரட்சி ஏற்பட்டு, விரைவில் வல்லரசாகும் என்பது உறுதி. நம் புரட்சித்தலைவியும், இதே கொள்கையை மனதில் வைத்து விவசாயிகளின் உரிமைகளுக்காக, தன் இறுதிமூச்சு வரை போராடினார் என்பதை. இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன். இந்த தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில், ஒளியேற்றிய நம் பிரதமருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…