விவசாயிகள் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்கள், சிறு விவசாயிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கானவை. குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியதோடு, சாதனை அளவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து எவ்வளவோ முயன்றும், சில விவசாயிகளுக்கு, வேளாண் சட்டங்களின் நன்மைகளை புரியவைக்க முடியவில்லை. அதற்காக விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். இதனால், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்ததுடன், டெல்லி எல்லைப்பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும் . வேண்டுகோள் விடுத்தார்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளதுடன், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்து உள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டம் – ஒரு பார்வை:
மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தப்போவதாக அறிவித்து மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.
- வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020
- விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020
- அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020
அதன்படி, இந்த 3 சட்டங்களும் 2020ம் ஆண்டு செப்டம்பர் 19ந்தேதி இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது ஏ.பி.எம்.சி. மண்டிகளிலும், மண்டிகளுக்கு வெளியிலும் வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் வாங்கவோ, விற்கவோ இந்தச் சட்டங்கள் வகை செய்வதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
ஆனால், இந்த மூன்று விவசாய சட்டங்களும் நாடு முழுவதும விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், விவசாயத்தை அடியோடு அழித்து விடும் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து, விவசாய சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என அறிவித்து, போராட்டங்களை தொடர்ந்து வருகிறது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு, காங்கிரஸ் திமுக உள்பட எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. தமிழகம் உள்பட பல மாநில சட்டமன்றத்திலும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம், தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) நெடுங்காலமாக அங்கம் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்ததுடன், அந்த கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் பாதல் 2020 செப்டம்பர் 20ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் சார்பில் 2020ம் ஆண்டு டிச., 9ந்தேதி பாரத் பந்த்’ நடத்தின. ஆனால், மத்தியஅரசு செவி சாய்க்க வில்லை.
பின்னர், வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நவ. 26ல் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டில்லியை நோக்கி போராட்டத்தை தொடங்கினர். அண்டை மாநில விவசாயிகளும் இணைந்தனர். டில்லி – உ.பி., மாநில எல்லையில் போராடினர்.
இதுதொடர்பான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கிடையில் மத்தியஅரசும் விவசாய அமைப்பினருடன் 10க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்கள் அமல்படுத்த இடைக்கால தடை விதித்ததுடன், விவசாயிகளின் போராட்டத்தை திருப்ப பெற அறிவுறுத்தியது.
ஆனால், விவசாய அமைப்பினர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என உறுதியாக டெல்லி எல்லையில் முகாம் அமைத்து போராடி வந்தனர். டெல்லி எல்லையில் கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்தது. விரைவில் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, விவசாயிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் டிராக்டர் போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்தன.
இந்த பிரதமர் பிரதமர் மோடி விவசாயிகள் சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பு ஒருபுறம் வரவேற்கப்படும் நிலையில், மற்றொரு புறம் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி மற்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப், உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2023ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தவிர்க்கும் வகையிலேயே, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்து உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.