விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.
‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
தளபதி 66 படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் கதை பிடித்துப் போனதால், மகேஷ் பாபுவும் தனது மகளை நடிக்க வைக்க க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக தெலுங்கு திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தற்போது ஷங்கர் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கும் தமன் தான் இசையமைத்து வருகிறார். ஆதலால் தளபதி 66 படத்துக்கு அவர் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் அறிமுகமாகும் விஜய், அங்கு தனது அறிமுகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால், படத்தின் 2 பாடல்களை கொரியோகிராப் செய்யுமாறு பிரபுதேவாவிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு தினங்களாக வேறு ஒரு தகவலும் இணையத்தில் வலம் வருகிறது. எரோட்டோமேனியா என்ற நோய் பின்னணியில் பைடிபள்ளி விஜய் படத்தின் கதையை எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. எரோட்டோமேனியா என்பது நம்மை ஒருவர் தீவிரமாக அன்பு செய்கிறார் என்று எந்த காரணமும் இல்லாமல் நம்புவது. அந்த நபரை நாம் சந்தித்திருக்க வேண்டும் என்பதில்லை. சந்திக்காமலே, அவர் நம்மீது அளவுகடந்த ப்ரியத்தில் இருக்கிறார் என நினைத்துக் கொள்வதுதான் எரோட்டோமேனியா.