சென்னை: திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்தன்று 15ஆயிரம் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் 99 சதவித அளவுக்கு தளர்த்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் கோவில் விழாக்களுக்கு தமிழகஅரசு தடை விதித்து வருவது இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை மாதத்தையொட்டி, திருண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை திப திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு கடுமையான கெடுபிடிக்களை அறிவித்துள்ள அரசு, தீபத்தன்று, பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதித்துள்ளது. இது பக்தர்களிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தீபத்திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், திருவண்ணாமலை கிரிவலம் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தமிழகஅரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதையடுத்து, அரசு சார்பில் திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப நாளில் மட்டும் 15,000 பக்தர்களை கிரிவலம் வர அனுமதிக்கலாம் என தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம், குறைந்தபட்சம் 20,000 பக்தர்களை அனுமதிப்பது குறித்து பரிசீலியுங்கள் என தற்காலிக தலைமை நீதிபதி கூறி, அதுதொடர்பான பிரமாணப்பத்திரித்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் விசாரணைக்கு ஒத்தி வைத்தார்.