நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…
ஜெய்பீம்.. தோண்ட விரும்பாததால் அத்தோடு விட்டுவிட்டோம்..
படத்திற்கு வட்டாரமொழி வசனத்தில் வசனத்தில் பங்காற்றிய கண்மணி குணசேகரன் அவர்களின் ஒரு பதிவால் இந்த விவகாரத்தில் நுழைய வேண்டி வந்தது.
காலண்டர் பிரச்சனை பேசப்பட்ட பிறகு டைரக்டர் தரப்பில் உறுதியளித்தபடி உடனே மாற்றப்பட்டுவிட்டது.
மறுபடியும் இந்த படத்தைப்பற்றி உள்ளே இழுத்துக் கொண்டு போன விஷயம் படத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவர் பெயர் பலகை.
படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் அந்த பாத்திரத்தின் பெயர் க. குணசேகரன்.
படத்திற்கு உதவியவரையே எப்படி வில்லன் பாத்திரத்தில் சித்தரிக்க நேரிட்டது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்று காட்டியிருப்பதாக சொன்னார்கள்.
அப்புறம் படத்தின் இயக்குனர் ஞானவேல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் செங்கேணி பாத்திரத்தின் நிஜ வடிவமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி சந்திக்கவே இல்லை என்று சொன்னார்.
ஒருவேளை நிஜப் பெயரை வைத்தால் பட லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று போய்விடுமோ என்ற யோசனையாகக்கூட இருக்கலாம்
பார்வதி என்ற நிஜ பிம்பத்தை பிம்பத்தை வைத்து படத்தை உருவாக்கியர்கள் அவரை மருந்துக்குக் கூட பார்க்கவில்லை என்று சொல்லும்போதே இது என்ன தொழில் தர்மம் என்று புரியவில்லை.
அதே பிபிசியில் இயக்குனருக்கு ஒரு கேள்வி…அவர் அளித்த பதில்
“1993 காலக்கட்டத்தில் நடந்ததை ஏன் 1995 மாற்றினீர்கள்?”
“படைப்பு சுதந்திரம்தான் காரணம். போராட்டம் என்பதை நான் முன்வைக்கிறேன். தனியார் தொலைக்காட்சி போன்ற விஷயங்கள் 1993ல் ஆரம்பித்தாலும், 1995-ல்தான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு இருந்த அரசு தொலைக்காட்சி சேனல்களில் எல்லாம் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. வானிலை அறிக்கை, அரசு சார்ந்த செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள் என நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது.அதை எல்லாம் உடைத்தது தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவுதான். அதனால், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் புகுத்த அந்த காலக்கட்டம் தேவைப்பட்டது. மேலும், தமிழ்நாட்டு சூழலில் 1995, 96 காலக்கட்டத்தில்தான் அதிக லாக்கப் மரணங்கள் நடந்தன. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது 1995வது காலக்கட்டம் எனக்கு மிக வசதியாக இருந்தது”
அதாவது படைப்பாளி ஒரு நிஜ சம்பவத்தில் தன் தேவைக்கு ஏற்ப காலகட்டத்தையும் மாற்றிக் கொள்கிறார் .
இவ்வளவு சர்ச்சைகள் எழுந்த பிறகும், உலகமே கொண்டாடக்கூடிய ஒரு படத்தை கொடுத்துவிட்டு பொதுவெளியில் விளக்கம் சொல்ல முன்வராமல் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஏன் தவிர்க்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது.
இதற்குப் பிறகும் இந்தப்படம் உருவாக்கம் பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம் என்று தோன்றியது.
இப்போது பேச ஆரம்பித்திருக்கும் படத்தின் இயக்குனர் ஞானவேல் தனக்குத் தெரியாமல் பல தவறுகள் நடந்து விட்டதாக சொல்கிறார்.
நிஜ சம்பவத்தையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையும் மையப்படுத்தி எடுக்குற படத்திற்கு காட்சிப்படுத்த எவ்வளவு மெனக்கெடல்கள் தேவை என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
ஒன்றுமில்லை,1995 காலகட்டத்தில் அந்த இன்ஸ்பெக்டர் கையில் ஆண்ட்ராய்ட் போன் இருப்பதாக படத்தில் காட்டப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.. எல்லோரும் சிரிக்க மாட்டார்களா?
படத்தை உருவாக்கும்போது தவறுகள் தெரியாமல் நடந்திருப்பின் ஆரம்பத்திலேயே ஓடிவந்து விளக்கம் அளித்திருந்தால் இந்த பிரச்சினையை ஒன்றுமே இல்லாமல் சுமூகமாக செய்திருக்கலாம்.
பாமக இந்த விவகாரத்தை முரட்டுத்தனமாக அணுகியபின் எல்லாமே பதற்றத்தின் பக்கங்களாக மாறிவிட்டன.
எந்த பழைய படம் போட்டாலும் பெரும்பாலும் இப்போது தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை இந்த லட்சணத்தில் குறிப்பிட்ட நடிகரின் படத்தை ஓட விடமாட்டோம் என்று வீம்பு.
இன்னும் ஒருபடி மேலே போய் நடிகரை தாக்கினால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று வன்முறைக்கு தூபம் வேறு.
சூர்யா தரப்பும் நீங்கள் எதுவரை போகிறதோ போங்கள் என்று வேடிக்கை பார்த்ததே தவிர, உடனடி தீர்வு…ஒரே தீர்வு.. என்ற வகையில் இறங்க மனசே வரவில்லை.
பாமக வுக்காக சில தரப்பும் சூர்யாவுக்காக சில தரப்பு என பிரிந்து இப்போது மோதிக் கொண்டிருக்கின்றன..
ஜெய்பீம் படத்தை அனைவரும் போற்றுகின்றனர். ஒரு தமிழ் படம் உலக அளவில் பேசப்படுவது சந்தோஷமான விஷயம்.
இந்த வரவேற்பாளர்கள் தரப்பு இரண்டு விஷயத்தை முக்கியமாக மறந்து விட்டது. ஒன்று, படத்திற்கு எதிரான கேள்விகளையும் ஏன் படக்குழுவினர் நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார்கள் என்பதைப் பற்றி யாருமே விமர்சனம் செய்யவில்லை.
இரண்டாவது ஜெய் பீம் படத்தின் முக்கிய நாடி, காவல்துறையின் அடக்குமுறை. அதைப் பற்றி பேசாமல் எல்லோருமே வசதியாக மறந்து போய் விட்டார்கள்.
சமூக நலனுக்கான படம், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான படம் என்றெல்லாம் ஒரு உருட்டு உருட்டு கிறார்களே தவிர, எல்லா காலத்திலும் எல்லா சமூக மக்களும் பாதிப்புக்கு உள்ளாகிற அரச பயங்கரவாதத்தை பற்றி மட்டும் பேசியதாக தெரியவில்லை.
அப்படிப்பட்ட பிரபலமான ஒரு நல்ல உள்ளத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.