டெல்லி: உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பணிமாற்றம் செய்ய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. இந்த பரிந்துரையை குடியரசு தலைவர் ஏற்று, அதற்கான உத்தரவினை பிறப்பித்து உள்ளார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியின் இடமாற்ற உத்தரவு வெளியான நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்துக்கான புதிய தலைமை நீதிபதிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாகவுள்ள முனீஸ்வர்நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2019ஆம் ஆண்டு அலகாபாத்தில் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் உதவி உயர்வு பெற்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணிகளை கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை கவனித்து வந்தார்.
இந்த நிலையில், முனீஸ்வரன் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியான நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் ஓரிரு நாட்களில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள முனீஸ்வரன் நாத் பண்டாரியின் பணிக்காலம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியுடன் முடிவடைகிறது.