சென்னை: ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை தாழ்த்தி சொல்வது சரியல்ல என சூர்யாவின் ஜெய்பீம் விவகாரம் குறித்து நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் விவகாரம் தமிழக திரைத்துறையிலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்கனவே ஒற்றுமை இல்லாமல் சின்னாபின்னமாகி கிடக்கும் திரைத்துறையில் மேலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெய்பீம் பட விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் ஜாதி மத மோதலை தூண்டும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த படத்தில் வன்னியர் சங்கத்தினரை இழிவுபடுத்தி உள்ளதாக நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்னியர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த விஷயத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக விசிக உள்பட சில கட்சிகள் உள்ளன.
இதற்கிடையில் நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் ரூ5 கோடி நட்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவை உதைத்தால் ரூ1 லட்சம் பரிசு தருவோம் என்றும், அவரது படங்கள் இனிமேல் தியேட்டர்களில் ஓட்ட முடியாது என்று தியேட்டர் அதிபர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக் குழுவினருக்கு ஆதரவாக இருப்போம் என்று இயக்குநர்கள் பாரதிராஜா,இ வெற்றிமாறன், அமீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஒருசிலர் சூர்யாவின் படத்தில் தேவையற்ற காட்சிகளை அகற்றி விட்டு, அமைதியாக இருந்தாலே போதுமானது என்று கூறி வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்கு பயந்து படமெடுக்க வேண்டும் என தெரியவில்லை. வம்படியாக திணித்தோ, திரித்தோ ‘ஜெய் பீம்’ படத்தில் எந்தக் கருத்துருவாக்கமும் செய்யப்படவில்லை. ஒவ்வொரு அரசியல்வாதியின் வாசலிலும் கதைசொல்ல படைப்பாளிகள் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் உருவாகிறது என தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சபாபதி பட நிகழ்வில் சந்தானம் பேசும்போது, ஜெய்பீம் படமாக இருந்தாலும் எந்த படமானாலும் நாம் சொல்றது இதுதான். நாம ஒரு கருத்தை சொல்றோம். எது நம்ம கருத்தோ அதை தூக்கி பேசலாம். ஆனால், அது அடுத்தவங்களை ஹர்ட் பண்ற மாதிரி அவங்களை அமுக்கி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம்.
சினிமாங்கிறது 2 மணிநேரம் லைட் ஆப் பண்ணிட்டு எல்லாரும் எல்லா ஜாதிக்காரர்களும் மதத்துக்காரங்க பார்க்கிறது. அங்க இது தேவைப்படாத விஷயம்.
நீங்க இந்துமதத்தை தூக்கிகாட்டுங்க.. அல்லது எதை பிடிச்சிருக்கோ அதை தூக்கி காட்டுங்க. அது பிரச்சனை கிடையாது. ஆனா அடுத்தவனை தாழ்த்தி காட்டாதீங்க..
இந்து மதம் சூப்பர்னா அதை சொல்லுங்க.. அதுக்காக கிறிஸ்டியானிட்டியை தாழ்த்த கூடாது.. அதுதான் என் கருத்து. நாம எதனை வேணும்னாலும் தூக்கி பேசலாம்.. அது பிரச்சனையே இல்லை.
இவ்வாறு சந்தானம் பேசினார்.
தற்போது சந்தானம் பேச்சையும் சர்ச்சையாக்கி வருகின்றனர்.