சென்னை: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ஜி.விநாயகமூர்த்தி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அதுபோல, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும். இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிய மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. எஸ்.ஜி. விநாயகமூர்த்தி அவர்கள் தமது 92 வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். 1959, 1963, 1968 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1967 முதல் 1974 வரை வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டவர். சென்னை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
1967 சைதாப்பேட்டை சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களையும் 1971 வடசென்னை மக்களவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நாஞ்சில் கி. மனோகரனை எதிர்த்தும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். 2001 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
பெருந்தலைவர் காமராஜர், அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ் காந்தி, மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் தலைமை மீது அளவற்ற பற்று கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக இருந்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர். காங்கிரஸ் கட்சியில் முழுநேரமாக பணியாற்றக் கூடிய ஓய்வறியா உழைப்பாளி., செயல்வீரர்.
காங்கிரஸ் இயக்கப் பணியில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட திரு. எஸ்.ஜி. விநாயகமூர்த்தி அவர்களது மறைவு காங்கிரஸ் இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இன்னொரு எஸ்.ஜி. விநாயகமூர்த்தியை காங்கிரஸ் கட்சியில் காண்பது அரிதாகும். அந்தளவுக்கு இயக்கப் பணிகளில் நாள்தோறும் ஈடுபாடு கொண்டு பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தியின் மறைவு மிகுந்த வருத்தத்துக்குரியது. த.மா.கா சார்பில் சென்னை, பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று உறுப்பினராக தொகுதி மக்களின் நலன் காக்க, தொகுதியின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டவர்.
தான் சார்ந்த தொகுதிக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சிக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுத்தவர். இயக்க வளர்ச்சிக்காக தொடர்ந்து திறம்பட செயல்பட்டவர். அரசியல் பணி, மக்கள் பணி ஆகியவற்றில் ஈடுபாடோடு செயல்பட்டவர். காமராஜர், மூப்பனார் ஆகியோரது தலைமையை ஏற்று அரசியல் பணியாற்றியவர். தமிழக மக்கள் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றிற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்ட எஸ்.ஜி.விநாயகமூர்த்தியின் மறைவு தமிழக அரசியலுக்கும், தமிழ்நாட்டிற்கும் இழப்பாகும்.அன்னாரது மறைவு இயக்கத்திற்கும், அவரது குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் இயக்கத்தினருக்கும், குடுபத்தாருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.