சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 9வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்; மற்றும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்ற 8வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் 50,000 இடங்களில் நடைபெற்றது. இந்த முகாம் காலை 7 மணி முதல்,மாலை 7மணி வரை நடை பெற்றதாகவும், சென்னையில் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறியவர், 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை 73% பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசியும், 35% பேருக்கு 2 வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தவர், வரும் நவம்பர் 21 ஆம் தேதி 9 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் கூறினார்.
மேலும், நாளை முதல் சனிக்கிழமை வரை வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும் திட்டம் தொடரும் என்றும் கூறினார்.