திருப்பதி
தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.
இன்று திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடந்தது. இந்த கூட்டத்துக்கு வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது உரையில் “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாத பிரச்சினையால், இங்கு அதிக தொழிற்சாலைகளை உருவாக்கவோ, சுற்றுலாவுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ எந்த அதிகாரத்தையும் எங்களால் செயல்படுத்த முடியவில்லை. புதுச்சேரியின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்.
இந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆண்டு பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகத்தின் மத்திய உதவி முற்றிலும் போதுமானதாக இல்லை. குறிப்பாக நடப்பு பட்ஜெட்டில் 1.57 சதவீதம் அதிகரிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. எனவே ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கவும் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 1500 கோடி மத்திய உதவி தேவைப்படுகிறது.
மேலும் புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யத் தமிழகத்தில் 216 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 54 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட சுமார் 225 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மத்திய அரசு அதை அளிக்கவேண்டும். சட்டப் பேரவைக் கட்டிடம் முற்றிலும் போதுமானதாக இல்லாமல் பழமையானதாகவும் உள்ளது. ர்ன்ச்ப்ர்ர் தலைமைச் செயலகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய சட்டப்பேரவை வளாகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அதற்கு சுமார் 300 கோடி ரூபாய் மானியம் தேவைப்படும்.” என்று வலியுறுத்தி உள்ளார்.