சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து இரண்டு நாள் பெய்த கனமழைக்கே மாநில தலைநகர் சென்னை, மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாப்பின்னமானது. மழைநீர் வெளியாற முடியாத அளவுக்கு காவல்வாய்கள், ஏரிகள், குளங்கள் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால், தண்ணீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் புகுந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை கடந்த 50ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளின் கூட்டுக்கொள்ளை காரணமாகவே சென்னை இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில், மழைபாதிப்பு குறித்து ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி செய்ததுடன், இனிமேல் சென்னையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து, சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.